சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கக் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன என்றும், இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MoHUA) பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதிஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இதற்குப் பிறகு, ஓன்றிய உள்துறை அமைச்சர், 21-11-2020 அன்று சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
Hon'ble PM Thiru , The prolonged delay in the approval for Phase-II of the Chennai Metro Rail Project has not only hindered our progress but also placed significant strain on our state's finances as it affects the timely completion of this vital infrastructure… pic.twitter.com/DlLhFectQs
— M.K.Stalin (@mkstalin)
2021-2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான எதிர் நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரும், 17-8-2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் (PIB) பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மத்திய துறை திட்டமாக பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும், ஒன்றிய அரசின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு ஆவலுடன் எதிர்பார்த்ததாக தனது கடிதத்தில் அவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தோல்வி முகம்: கோட்டை விட்டாரா எடப்பாடி பழனிசாமி?
ஆனால், இந்தியப் பிரதமர் உடனான பல்வேறு சந்திப்புகளின்போது இது தொடர்பாக தான் வலியுறுத்தி வந்தபோதிலும், இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்திட ஏதுவாக, இரண்டாம் கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாகவும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், ஒன்றிய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநில நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொண்டு வருவதாகவும், இது பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் சென்னை மக்களின் இந்த கனவுத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும் என்றும் தனது கடிதத்தில் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிச் செயல்படுத்தியதைப்போல, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.