அதிமுக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலிலும் அக்கட்சி தோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன
தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க தலைவர்களாக கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தனர். அவர்கள் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனை நிரப்ப பலர் அரசியல் களம் கண்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியல் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், கருணாநிதி மறைவுக்கு பிறகு, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் அக்கட்சி முழுவதுமாக சென்று விட்டது.
ஆனால், அதிமுகவில் நிலைமை அவ்வளவு சுமூகமாக இல்லை. ஜெயலலிதா தனது அரசியல் வாரிசை அறிவிக்காமலேயே காலமானதும் ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்களும், திருப்பங்களும் நடந்தன, இன்றளாவும் நடந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்திருந்தார் ஜெயலலிதா. ஆனால், அவரது மறைவுக்கு பின்னர் நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது.
ஜெயலலிதா மறைவையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். திடீரென அப்போதைய கட்சித் தலைமை சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி சிறை சென்றார்.
சசிகலா சிறை செல்வதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு சென்றார். ஆனால், அவர் திரும்பி வருவதற்குள் எடப்பாடி - ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. சசிகலாவை கட்சியில் இணைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஒற்றை தலைமையாக உருவெடுக்க முடிவெடுத்து அதன்படி, அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்ட முடிவுகளின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். இதற்கு எதிராக ஓபிஎஸ் நடத்திய சட்டப்போராட்டங்களும் தற்போது வரை இபிஎஸ்சுக்கு ஆதரவாகவே உள்ளது.
இப்படியாக, கட்சிக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமியால் தேர்தல் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. காரணம், கட்சிக்குள் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்த அதிமுக தோல்வியடைந்தது. அதற்கு முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி படு தோல்வியடைந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதுவும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றார். ஆனால், ஓபிஎஸ்சோடு சேர்ந்து அவரது மகனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், மக்களவையில் அதிமுகவிற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தொடங்கி, 2021 சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், கிராமப்புற உள்ளாட்சி தேர்தல், 9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என தொடர்ந்து 6 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த பின்னணியில் எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலிலும் அதிமுக தோல்வி அடையும் என்றே கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியாடுடே - சிவோட்டர் கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 38 இடங்களில் வென்றிருந்த திமுக கூட்டனி இந்த முறை 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கி 47 சதவீதமாக இருக்கும் எனவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு வங்கி 15 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கி 6 சதவீதம் குறைந்துள்ளது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு வங்கி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிமுகவை பற்றி தனியாக எதுவும் குறிப்பிடவில்லை. மற்றவை என்ற பிரிவின் வாக்கு வங்கி 38 சதவீதமாக உள்ளது.
அதேபோல், டைம்ஸ் நவ் - மேட்ரிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், மக்களவைத் தேர்தல் 2024இல் திமுக கூட்டணி 59.7 சதவீதம் வாக்குகளை பெற்று 36 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 20.4 சதவீத வாக்குகளை பெற்று ஒரு இடத்தில் வெற்றி பெறும் எனவும், 16.3 சதவீத வாக்குகளுடன் அதிமுக 2 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாஜகவை விட அதிமுகவின் வாக்கு வங்கி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முதுகில் சவாரி செய்து அக்கசியை பாஜக ஒழித்துக்கட்டி விடும் என்ற விமர்சனங்களை, கருத்துக்கணிப்பு முடிவுகள் மெய்ப்பிக்கும் வகையில் உள்ளன.
அதிமுகவில் இரட்டை தலைமை நீக்கப்பட்டு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை நிரூபிக்கும் தேர்தலாகவும் இது பார்க்கப்படுகிறது. எனவே, இதில் கணிசமாக வெற்றியை பெற அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பின்னடைவு ஏற்படும் என அதிமுக கருதுவதாக தெரிகிறது. மேலும், சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரையும் கூட்டணி இணைக்க பாஜக மேலிடம் விரும்புவதாக தெரிகிறது. இதற்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்மையில் அதிமுக அறிவித்தது. இந்த பின்னணியில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இந்த கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.
மோடிக்குப் பிறகு பிரதமராக தகுதியானவர் யார்? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
பாஜகவை கூட்டணியில் வைத்துக் கொண்டிருப்பதால்தான், அக்கட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் தமிழ்நாட்டில் கடந்த கால தேர்தலில் சோபிக்க முடியவில்லை எனவும் அதிமுக கருதுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதேசமயம், கூட்டணி முறிவு என்பதே கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தால் இரு கட்சிகளுமே தமிழகத்தில் ஜொலிக்க முடியாது என்பது பாஜக தலைமைக்கு நன்கு தெரியும். எனவேதான் தனித்து களமாடி பாஜகவின் செல்வாக்கை உயர்த்துவதுடன், தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் அல்லது அதிமுகவை அரவணைத்து ஆதரவாக இருக்க வைத்துக் கொள்ளலாம் என பாஜக திட்டமிட்டு, அதிமுக தலைவர்களுக்கும் இதனை தெரியப்படுத்தியே, கூட்டணி முறிக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதுஒருபுறமிருக்க, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் பக்கம் வரும் எனவும், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்கவும் அதிமுக திட்டமிட்டது. ஆனால், அதிமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு வரவில்லை. மாறாக, பெயரளவுக்கு பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளதாக வெளிப்படையாகவே அக்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுகவுக்கு இதுவரை பிடி கொடுக்கவில்லை.
இந்த பின்னணியில், வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கணித்துள்ளதால், அதிமுகவின் எதிர்காலம் சவாலாக அமைந்துள்ளது.