
இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள NExT என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NExT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், NExT தேர்வுவை கைவிட வேண்டுமென்றும் தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேஷனல் எக்சிட் டெஸ்ட் (NExT), ஏற்கனவே கடுமையான கல்விச் சுமையைக் கொண்ட நமது இளம் மருத்துவ மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். அவர்களின் படிப்பு மற்றும் பயிற்சியின் போது தேர்வில் அதிக கவனம் செலுத்த அவர்களை கட்டாயப்படுத்தும். அவர்களின் மருத்துவ திறன்களின் வளர்ச்சியைத் தடுக்கும். சுகாதாரத் துறையில் மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பங்கை நீர்த்துப்போகச் செய்வதற்கும், அதிகாரங்களை மத்திய அரசிடம் மையப்படுத்துவதற்கும் இது ஒரு முயற்சியாகும். எனவே, தற்போதுள்ள நடைமுறையை தொடர வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
வலுவிழந்தது பிபர்ஜாய் புயல்: மக்களை வெளியேற்றும் பணி குஜராத்தில் தீவிரம்!
தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தகுதித் தேர்வாகவும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் இருக்கும். அதேபோல், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் பதிவு செய்து பணியாற்றவும் எழுதப்படும் Foreign Medical Graduates Examination என்ற தேர்வுக்கு பதிலாகவும் இந்த நெக்ஸ்ட் தேர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கல்வி ஆண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (National Exit Test) எனப்படும் நெக்ஸ்ட் (NExT Exam) தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.