
சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை, செவிலியர்களுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 4.89 ஏக்கர் நிலத்தில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், குடியரசுத் தலைவர் வெளிநாடு பயணத்தால் மருத்துவமனை திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 15ஆம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார் என கூறப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் வராத காரணத்தால், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை, செவிலியர்களுடன் இணைந்து ரிப்பன் வெட்டி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த மருத்துவமனையில் சிறுநீரகவியல், இருதயவியல், கதிரியக்கவியல், நரம்பியல், நுண்ணுயிரியல், மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை, அவரச சிகிச்சை, பல்வேறு ஆய்வகம் உள்ளிட்ட மொத்தம் 20 உயர் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. 6 தளங்கள், 3 கட்டிடங்கள் கொண்ட இந்த மருத்துவமனையில் 1,000 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ள. ஏ பிளாக்கில் நிர்வாக கட்டிடம் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகள் இயங்கும், பி பிளாக்கில் அறுவை சிகிச்சை பிரிவு, சி பிளாக்கில் கதிரியக்க வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.