வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்


அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு ஆயத்தப் பணிகள் குறித்து நம்முடைய தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையரும் எடுத்துரைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் விவரம் பின்வருமாறு;

Latest Videos

** வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

** பேரிடர் குறித்த எச்சரிக்கை தகவல்கள் கடலோர பகுதிகளில் 424 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை கருவிகள், TNSMART செயலி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை, அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு உரிய காலத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்.

** வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் கண்டறியப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  

** நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும்.

** பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

** நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாருவதோடு, கரைகளையும் வலுப்படுத்த வேண்டும். அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழங்கப்பட வேண்டும்.

** மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். பள்ளிகளில் மாணவர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

** பருவமழைக் காலத்தில், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, நோயுற்ற மக்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு, உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருத்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.

** மாவட்ட ஆட்சியர்கள், கன மழை, புயல், வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை பல்துறை மண்டல குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 

** சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் வடிகால் பணிகளையும், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

** பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

** ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனுக்குடன் அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மீண்டும் விண்ணப்பிக்க உதவி மையம்!

** பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்டந்தோறும் அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஒத்திகைப் பயிற்சிகள் நடத்துவதோடு, பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைத்திடவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவமழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

click me!