திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்: ஆளுநரை சாடிய முதல்வர் ஸ்டாலின்!

By Manikanda Prabu  |  First Published Oct 24, 2023, 2:45 PM IST

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள் என ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்


ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்த மருது பாண்டியர்கள் நினைவு நாள் இன்று அணுசரிக்கப்படுகிறது. மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், “சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு!

Tap to resize

Latest Videos

கழக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவண்ணத்தில் 'தென்பாண்டிச் சிங்கம்' எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்குவேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர்களது கதை நிலைத்திருக்கிறது.

திமுக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்! இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார்.” என பதிவிட்டுள்ளார்.

உலகின் பாதுகாப்பான நகரங்கள்: சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

முன்னதாக, திருச்சியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் சார்பில் மருது சகோதரர்கள் நினைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகம் புண்ணிய பூமி, இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு  முயற்சி செய்கிறது. ஆங்கிலேய திராவிட கதையை பரப்பும் அரசியல் சதியின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் சாதிய தலைவர்களாக சிறுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.” என்று குற்றம் சாட்டினார்.

ஆளுநரின் இந்த பேச்சு வழக்கம் போல் சர்ச்சையாகியுள்ளது. பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும் என ஆளுநர் ரவி மற்றும் பாஜகவினரை முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்.

click me!