பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வடசென்னை மக்கள் 30 ஆயிரம் பேருக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வழங்க நாளை பிரதமரை சந்திக்கிறேன். அப்போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் கோரிக்கை வைக்கப்படும்.
திமுக இளைஞர் அணி மாநாடு தேதி குறித்து தலைவர், பொதுச்செயலாளர் ஆலோசித்து ஓரிரு நாட்களில் தேதி அறிவிப்பார்கள். ஜனவரி மாதம் இறுதிக்குள் மாநாடு நடைபெறும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு இரண்டரை மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளோம் என்று பிரதமர் சொல்கிறாரே என்ற கேள்விக்கு, நிதி விஷயத்தில் விதண்டாவாதம் செய்ய விரும்பவில்லை. நிதியமைச்சர் சொன்னதற்கு ஏற்கனவே விளக்கம் சொல்லிவிட்டேன். மழை பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நேரில் பார்வையிட்டு இருக்கிறார். தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.