மின்வெட்டால் இருளில் மூழ்கிய சென்னை… விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!!

By Narendran SFirst Published Nov 8, 2021, 1:17 PM IST
Highlights

மின்கசிவால் உயிரிழப்புகள் ஏற்பாமல் தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்கசிவால் உயிரிழப்புகள் ஏற்பாமல் தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவந்த நிலையில் தற்போது அது தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதில் நீர் நிலைகள் நிரம்பின. மேலும் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனிடையே சென்னையில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததை அடுத்து சாலை எங்கிலும் வெள்ள நீர் தேங்கியது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதை அடுத்து மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்தனர். மேலும் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், மின் கசிவு ஏற்படாத வகையில் பார்த்து கொள்ளவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் சென்னையின் பலபகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரம் நிறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மின்சார வினியோகம் சீராக இருக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்க கூடாது எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்கசிவால் உயிரிழப்பு ஏற்பாமல் தடுக்கவே மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சென்னையில் 0.27 சதவிகிதம் பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் மேற்கு மாம்பலம், வள்ளுவர் கோட்டம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர் மழையினால் ட்ரான்ஸ்பார்மர்கள் ஏதும் சேதமடையவில்லை என்றும் மின்சாரம் தாக்கி யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சூழல் ஏற்படக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயாராக உள்ளதாகவும் மின்கம்பங்கள் ஏதேனும் சேதமடைந்தால் உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மின் வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், மழை பாதிப்பு காரணமாக சென்னையில் ஆயிரத்து 508 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் 607 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மழை நீர் வடிவதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது 0.27% மட்டுமே மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மழைநீர் வடிந்த பிறகு அந்தப் பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

click me!