புறமுதுகிட்டு ஓடும் பழனிச்சாமி..! உங்களுக்கு இந்த சேலஞ்செல்லாம் தேவை தானா,.? அமைச்சர் ரகுபதி விமர்சனம்

Published : Dec 27, 2025, 07:04 PM IST
Ragupathi, Edappadi Palaniswami

சுருக்கம்

கள்ளக்குறிச்சியில் ஓபன் சேலஞ்ஜ் விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பதில் தருவதாக நினைத்து, எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொட்டியிருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா கொண்டு வந்த லேப்டாப் திட்டத்தையே முடக்கிய பழனிசாமிக்கு பேச்சை பாருங்க…!

கள்ளக்குறிச்சியில் ஓபன் சேலஞ்ஜ் விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பதில் தருவதாக நினைத்து, உளறிக் கொட்டியிருக்கும் அடிமை எதிர்க் கட்சித் தலைவரே…

திமுக அரசு விஷயம் என்றால், முழித்துக் கொள்வதும், ஒன்றிய அரசு விவகாரமாக இருந்தால் கண்ணை மூடிக்கொள்வதும் என உங்கள் செயல்பாடு உருமாறுவது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் அடிமை பழனிசாமி, சூனா பானா வேடம் தரிக்கிறார்?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கினால் போதுமா? பெயர் வைத்தால் குழந்தை தானாக வளர்ந்துவிடுமா? அந்தக் குழந்தைக்குச் சத்தான உணவைத் தர வேண்டாமா? மாவட்டத்தை உருவாக்கினால், அதனை நிர்வகிக்கக் கட்டடம் வேண்டாமா?

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் தற்காலிகமாக கலெக்டர் அலுவலகத்தை வைத்துவிட்டுப் போனீர்கள். திமுக அரசு வந்த பிறகுதான் 2024 செப்டம்பரில் கலெக்டர் பிரசாந்த் அவர்களால் புதிய கலெக்டர் அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. எதையும் டிவியை பார்த்துத் தெரிந்து கொள்ளும் பழனிசாமிக்கு இது தெரியாதா? அப்படி அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்ததும் ஏன் எரிகிறது?

‘அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுகிறோம்’ என்கிறார் பழனிசாமி. 2015-ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது, தனியாரும் தன்னார்வலர்களும் அளித்த நிவாரணப் பொருட்களில் எல்லாம் தேடித் தேடி ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கர் ஒட்டியவர்கள்தானே நீங்கள்! பட்ஜெட் சூட்கேஸ், குதிரை, குழந்தை, மணமக்கள் என எதையும் விட்டு வைக்காமல் அவர்கள் மீதெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி தமிழ்நாட்டின் மானத்தை அகில உலகிற்கும் காட்டியவர்களுக்கு எப்போதும் ஸ்டிக்கர் பற்றிய நினைப்புதான் இருக்கும்!

பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கிரானைட் கொள்ளை, கொடநாடு கொலைகள், கூவத்தூர் கூத்துகள், மவுலிவாக்கம் கட்டட விபத்து, மக்கள் நலப் பணியாளர்கள் போராட்டம், தர்மபுரி கலவரம், சாத்தான்குளம் இரட்டை மரணம், நிர்மலாதேவி விவகாரம், ஜல்லிக்கட்டு போராட்டம் என சந்தி சிரித்தது எல்லாம் யாருடைய ஆட்சியில்? இதில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தாராம். உங்களுக்குக் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? இன்னும் பட்டியல் போட முடியும். நீங்கள் மூச்சு இரைக்க வாசிக்க வேண்டியிருக்கும் என்பதால் குறைத்துச் சொல்லியிருக்கிறோம்.

20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று சொன்னதும் பழனிசாமியின் அடிவயிறு ஏன் எரிகிறது? தேர்தல் வாக்குறுதி என்பது 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவது. அதனை ஏன் நான்கரை ஆண்டுகள் கழித்துக் கொடுக்கிறீர்கள்? எனக் கூச்சமே இல்லாமல் கேள்வி எழுப்புகிறார் பழனிசாமி.

அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த லேப்டாப் திட்டத்தை நாங்கள் முடக்க நினைக்கவில்லை. அதனால்தான் அந்தத் திட்டத்தைத் தொடர்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019-ஆம் ஆண்டு வரை மட்டுமே அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தையே முடக்கிவிட்டு பேச்சை பாருங்க… எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..!

என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? அதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?’ என கேட்டிருக்கிறார். இதற்கு எதற்கு மேடை போட வேண்டும்? சட்டமன்றத்தில்தான் நேருக்கு நேர் பேசலாமே! அங்கே முதலமைச்சர் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் வெளிநடப்பு என புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு Open challenge என பீலா தேவையா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe
அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும் - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு