குறுவை பயிற்சேதம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
குறுவை பயிற்சேதம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவ வெளியிட்டுள்ள அறிக்கையில், 03.10.2022 அன்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவித்துப் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி பழனிச்சாமி ஒரு வெற்று அறிக்கையினை வெளியிட்டு குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் வெற்று விளம்பரத்தை அரங்கேற்றியுள்ளார். முதற்கட்டமாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 1 இலட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே தவறானது. இத்துறையின் முதற்கட்ட கணக்கெடுப்பில் 17,775 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எப்பொழுதுமே ஆதாரமின்றி பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் வைப்பதிலேயே வாடிக்கையாக கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றிய அடிப்படை புரிதல் ஏதும் இல்லாமல் அறிக்கை விடுகிறார். நிரந்தரக் கட்டடம் கொண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தான் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் என்று கூறுவர். ஆனாலும் அவையும் தற்காலிகமாகக் கொள்முதல் செய்பவை தான். நெல் கொள்முதலைக் குறைத்திட வேண்டும் என்று அரசு கூறுவதாக வடிக்கட்டிய பொய்யைக் கூறியுள்ளார். 1.9.2022 முதல் நேற்று வரை 902 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3.35 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 670 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, 2.47 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 753 கொள்முதல் நிலையங்கள் மூலம் தமிழகம் முழுவதும் 3.22 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 531 கொள்முதல் நிலையங்கள் மூலம் 2.07 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்களைப் பார்த்தாலே நெல் கொள்முதல் தொடர்பாக எந்த விவரத்தையும் புரிந்து கொள்ளாமலும், அறிந்து கொள்ளாமலும் வேண்டுமென்றே இவ்வரசின் மீது களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சித் தலைவர் தவறான அறிக்கையை விடுகிறார் என்பது தெளிவாகும்.
இதையும் படிங்க: "லயோலா எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும் பேர்வழிகளே.. ராஜராஜன் இந்து இல்லையா".? கொதிக்கும் ராமரவிக்குமார்.
விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் பட்டியல் பெறப்பட்டவுடன் அதற்கான தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை இந்த பருவத்திற்கு ரூ. 420.05 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர என்பதை 'நிரந்த' என்றும் கொள்முதலைக் 'கொல்முதல்' என்றும் அலைக்கழிப்பு என்பதை 'அழைகளிப்பு' என்றும் குறிப்பிடுவதிலிருந்தே எவ்வளவு 'ஆழ்ந்து' அறிக்கை விடுகிறார் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த விவசாயிகளுக்கான இவ்வரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஏற்கனவே 26.09.2022 அன்று நடந்த ஆய்வின்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து 27.09.2022 அன்று நானும் விரிவான அறிவுரைகளை வேளாண்துறை உயர் அலுவலர்களுக்கு வழங்கியதோடு நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கண்காணிக்க 5,000 வேளாண் அலுவலர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டள்ளனர்.
விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விதைகளைப் பொறுத்தவரை, நெல், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி விதைகள் 53,182 மெட்ரிக் டன் இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் உரம் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி யூரியா90,947 மெ.டன், டி.ஏ.பி. - 55,628 மெ.டன், பொட்டாஷ் - 33,876 மெ.டன்., காம்பிளக்ஸ் - 1,61,626 மெ.டன். இருப்பில் உள்ளன. விவசாயிகளின் நலன் கருதி உரத்தட்டுப்பாட்டினை நீக்குவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டது. இதன்படி உரம் தொடர்பான புகார்கள் 9363440360 என்ற செல்போன் எண்ணிலும் வாட்ஸ்அ ப்பிலும் புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன் விவசாயிகளின் உரத்தேவை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே, போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளதாலும், சீரிய முறையில் விநியோகிக்கப்பட்டு வருவதாலும் விவசாயிகள் உரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏதுமில்லை சாகுபடி பரப்பு அதிகரித்த அதே வேளையில் கூட்டுறவு வேளாண் கடன்கள் வழங்கப்படவில்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டுள்ளார். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் இந்த ஆண்டில் மட்டுமே 6,04,060 விவசாயிகளுக்கு ரூ.4,566.13 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, டெல்டா மாவட்டங்களில் மட்டும் ரூ.603.50 கோடி அளவிற்கு 87,768 விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் எதிரிகள், தேச துரோகிகள் திருமாவளவனும், சீமானும்; போட்டுத்தாக்கிய ஹெச்.ராஜா!!
ஆனால் இதே காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சியில் 4,87,640 விவசாயிகளுக்கு 3814.19 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது; டெல்டா மாவட்டங்களில் 63,398 விவசாயிகளுக்கு 427.05 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி. 2011ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 3.428 இலட்சம் ஏக்கர் தான் பயிரிடப்பட்டது என்பது ஏனோ அவருக்கு புரியவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சொல்வதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்ற குறிக்கோளின் அடிப்படையில் எண்ணற்ற நலத்திட்டங்களை நாள்தோறும் நிறைவேற்றி வரும் மாண்புமிகு முதலமைச்சர் இந்தாண்டு விவசாயிகளின் சன்னரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,160/-ம் சாதாரண ரகத்திற்கு ரூ.2,115/-ம் வழங்க ஆணையிட்டுள்ளார்கள். இந்த அரசு பொறுப்பேற்றவுடன் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கும் ஆதார விலை உயர்த்தி ஒரு டன்னுக்கு ரூ.2,950ஆக வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக நெல்லுக்கும், கரும்புக்கும் ஆதார விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய அரசு விதிக்கும் விதிமுறைகளுக்குட்பட்டு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறுவை மற்றும் சம்பா பயிரிடும் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில் வேளாண் அதிகாரிகள் மற்றும் இன்னும் பிற வருவாய்த் துறை அலுவலர்களும் இணைந்து துல்லியமாகக் கணக்கிட்டு போதிய நிவாரணம் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உரிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கு ரூ.208.85 கோடி அளவிற்கு கணக்கிட்டு, நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 25.09.2022 முதல் பாதிப்படைந்த டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் நேரடியாக களப்பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட நெல் பரப்பினை கணக்கெடுத்து வருகிறார்கள். எடப்பாடியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல இவ்வரசின் சீரிய முயற்சியினால் எடுத்த நடவடிக்கையின் காரணமாக விவசாயிகள் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் நடப்பாண்டில், மாண்புமிகு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் ஆறுகள், வாய்க்கால்கள் முன்கூட்டியே தூர் வாரப்பட்டு, மேட்டூர் அணை முன் கூட்டியே திறந்ததுடன், விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டமும் அறிவித்து, குறித்த காலத்தில் விதை, உரங்கள் வழங்கப்பட்டதால். 1973-74க்கு பிறகு சாதனையாக 5.37 இலட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி டெல்டா மாவட்டங்களில் அடையப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனையாகும். மேலும், நடப்பாண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அக்டோபரில் நெல் கொள்முதல் செய்வதற்கு பதிலாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாதத்தத்தின் தொடக்கத்திலேயே நெல் கொள்முதல் செய்வதை துவங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்ற சாதனைகளை தன்னுடைய ஆட்சிக்காலத்தில் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடன் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை உண்மைக்கு புறம்பான அறிக்கையாகும் என்று தெரிவித்துள்ளார்.