வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பணியில் மெத்தனம் காட்டும் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்யுமாறு சுகாதாரத்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்தார்.
செவ்வாய் கிழமை சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக வேலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கட்சியின் மூத்த அமைச்சரான துரைமுருகனை அழைத்துக் கொண்டு வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் திடீரென அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது பாம்பு கடிக்கு மருந்து இல்லை, இரவு நேரங்களில் பணியாளர்கள் இருப்பது கிடையாது, சில நோய்களுக்கு பல நேரங்களில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பாம்பு கடிக்கு மருந்து எடுத்து வருமாறு பணியாளரிடம் கோரினார். அப்போது மருந்து இல்லை. இதனால் துரைமுருகன் பணியாளர்களை கடிந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணிகள் இயக்குநரை பார்த்து நீங்கள் யார்? உங்களைப் பார்த்ததே இல்லையே, தற்போது தான் பார்க்கிறேன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நான் தான் சுகாதார பணிகள் இயக்குநர் என்று பதில் அளிக்கவே, நான் உங்களை இதற்கு முன்னர் இங்கு பார்த்ததே இல்லயே என்று துரைமுருகன் என்று தெரிவித்தார்.
மேலும் பணியில் மெத்தனம், அலட்சயம் காட்டும் பணியாளர்களை பணியிடை நீக்கம் அல்லது கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யுமாறு அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேட்டுக் கொண்டார். அமைச்சர் துரைமுருகனின் பேச்சை கேட்ட பணியாளர்கள் சற்று உரைந்து போயினர்.