கருணை அடிப்படையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் 14 பேருக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பணி நியமன ஆணை வழங்கினார்.
கருணை அடிப்படையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் 14 பேருக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பணி நியமன ஆணை வழங்கினார். சென்னை, கிண்டி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலக கூட்ட அரங்கில், விற்பனைக்குழுவில் பணியாற்றி, பணிக்காலத்தின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு அவரவர் தம் தகுதிக்கேற்ப 14 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதனை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் மற்றும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையின் செயல்பாடுகள் தொடர்பாக விற்பனைக்குழு செயலாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
அப்போது பேசிய அவர், விளைபொருட்களை சேமித்து வைத்து உயர்ந்த விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விற்பனை செய்திட ஏதுவாக மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 510 சேமிப்புக்கிடங்குகள் உள்ளன. இவற்றின் மூலம் 3.75 இலட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சேமித்து வைக்கலாம். 2022, நவம்பர் வரை 17.66 இலட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பொருளீட்டுக்கடனாக விவசாயிகளுக்கு ரூ.13.38 கோடியும், வணிகர்களுக்கு ரூ.2.84 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சந்தை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் 63 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 64 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டி மரணங்களில் 3வது இடத்தில் தமிழ்நாடு.. தொடரும் அவலம் ! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வசதிகளை முழுமையாக பயன்படுத்தி நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்திடவும், விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு பொருளீட்டுக் கடன் அதிகமாக வழங்கிடவும், மின்னணு வேளாண் சந்தை மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். அனைத்து விற்பனைக்கூடங்களும் தூய்மையாகவும், சிறந்த முறையில் பராமரிக்கவும் துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். மாண்டஸ் புயலினால் திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய வடமாவட்டங்களில் பயிர்கள் நீரினால் சூழப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்த பிறகு உரிய கணக்கெடுப்புகள் நடத்தி 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு முதல்வரின் ஆலோசனை பெற்று நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.