
சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த போக்குவரத்து நாளை மாலைக்குள் சீரமைக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே இன்று பிற்பகலில் சாலையில் திடீரென 12 அடி ஆழத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் மாநகர பேருந்தும், ஒரு காரும் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது.
இதில் பயணிகள் 10 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த மெட்ரோ ரயில் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பள்ளத்தில் சிக்கிய காரையும், பேருந்தையும் மீட்டனர். தொடர்ந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் ஜெயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நாளை மாலைக்குள் அண்ணா சாலையில் போக்குவரத்து சீரமைக்கப்படம் என தெரிவித்தார்.
பொதுவாக சுரங்கம் தோண்டும்போது இது போன்ற விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்த ஜெயகுமார், தற்போது ஏற்பட்டுள்ள இந்த விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என்பதே நமது அதிர்ஷ்டம் என கூறினார்.
இனி இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜெயகுமார் என தெரிவித்தார்.