சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

By Manikanda PrabuFirst Published Dec 15, 2023, 8:31 PM IST
Highlights

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் சேலம் சென்றபோது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் அருகே செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். அப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த மாடர்ன் தியேட்டர்ஸ் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு அலங்கார வளைவில் இந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாயிலின் உட்பகுதியில், நெடுஞ்சாலைத் துறையால் அளவுக்கல் நடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை வைப்பதற்கு இடம் தேவைப்படுகிறது என்று கேட்டு, மாவட்ட அதிகாரிகள் தனக்கு நெருக்கடி கொடுப்பதாக அந்த நிலத்தின் உரிமையாளர் விஜயவர்மன் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நிலம் தனக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos

மேலும், சேலம் வந்தபோது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயிலை பராமரித்து வருவதற்காக மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், விருப்பமிருந்தால் அந்த இடத்தை தர முடியுமா என்று கேட்டார். ஆனால், கட்டாயம் எதுவுமில்லை என்று கண்ணியத்துடன் கூறிவிட்டார். குடும்பத்தினரை ஆலோசித்துவிட்டு தகவல் தெரிவிப்பதாக அவருக்கு பதில் கூறினேன். ஆனால், தற்போது மாவட்ட நிர்வாகத்தினர் நெருக்கடி கொடுப்பதாகவும் விஜயவர்மன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன. 

இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது, தற்போது, மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியின் நுழைவாயில் வளைவு சேலம் - ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண்.8இல் உள்ளது. 

இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால், 2.12.2023 அன்று, அளவீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின் போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.

விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகராம: பல்வீர் சிங்கிற்கு ஜாமீன்!

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ,  சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே, இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர, வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெளிவுபடுத்தப்படுகிறது.” இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் - ஏற்காடு சாலையில் 1935ஆம் ஆண்டில் திரைப்படக் கலைஞர் டி.ஆர்.சுந்தரத்தால் தொடங்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர் உள்ளிட்ட பலர் பணியாற்றியுள்ளனர். டி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு பிறகு, வர்மா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் அந்த இடத்தை வாங்கி, வீடுகளைக் கட்டி விற்பனை செய்தது. தற்போது மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவும் அதற்கு உள்ளே சிறிய இடமும் மட்டும்தான் அதன் நினைவாக இருந்து வருகிறது

click me!