
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லம் ஆக்கும் பணிகள் இப்போது தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கேரளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிறுவயதில் வாழ்ந்த வீட்டை நினைவில்லம் ஆக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி எடுத்த முயற்சிகள் பலன் தந்துள்ளன.
தமிழக முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர்., சிறுவயதில் வாழ்ந்த பூர்வீக வீடு, கேரளத்தின் பாலக்காடு அருகே வடவன்னூர் பகுதியில் உள்ளது. சுமார் 30 செண்ட் பரப்பில் உள்ள கிராமத்து வீடான அது, பாழடைந்த நிலையில் இருந்தது. வெகுநாட்களாக பராமரிக்கப் படாமல் இருந்த வீட்டை சைதை துரைசாமி கண்டு, அதில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள கிராம பஞ்சாயத்திடம் கோரினார். அவரது கோரிக்கைக்கு கிராமப் பஞ்சாயத்தும் ஒப்புக் கொண்டது. அந்த இல்லத்தில், கேரள சமூக நலத்துறையின் கீழ் இருந்த அங்கன்வாடி மையம் இருந்தது. இதை அடுத்து, அங்கே பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப் பட்டது.
அங்கிருந்த அங்கன்வாடி மையம் ஒரு கான்கிரீட் கட்டடத்துக்கு மாறப் போகிறது. தற்போதைய பழைய வீட்டில் கரையான் பிடித்த மரச் சட்டங்கள் மாற்றப்பட்டு, பழைய நிலையில் சரி செய்யப்படுமாம். அதைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமாவின் நினைவாக இருந்தது இந்த வீடு. இதில் இப்போது எம்ஜிஆரீன் சிலை ஒன்று வைக்கப்படவுள்ளது. புகைப்படங்கள், புத்தகங்கள், எம்ஜிஆர் குறும்படங்களைத் திரையிடுவதற்கான மினி தியேட்டர் கொண்ட சிறு அரங்கு என அமையவுள்ளன.
கிராமப் பஞ்சாயத்தின் துணைத்தலைவர் ராஜீவ் இது குறித்துக் கூறியபோது, இன்னும் ஒரு மாதத்தில் முதல்கட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடையும். இதற்காக சைதை துரைசாமி ரூ.10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இரண்டாம் கட்ட பணியில் அங்கன்வாடி மையம், சிலை ஆகியவை தயாராகும். இந்த அரங்கிற்கு எம்.ஜி.ஆர் நினைவு சமுதாய அரங்கு என ஏற்கெனவே பெயர் மாற்றிவிட்டோம் என்று கூறினார்.
எம்ஜிஆரின் தந்தை மருதூர் கோபால மேனன், இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள நல்லப்பில்லி கிராமத்தைச் சேர்ந்தவர். இலங்கையில் பிறந்தாலும் பின்னாளில் வடவனூருக்கு வந்து குடியேறினர். அவரது தந்தையார் கண்டி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்று கூறினார் ராஜீவ்.