உயிரிழந்த பிள்ளைகளின் கண்கள் தானம் … மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்து இறந்த போதும் நெகிழச் செய்த டீ கடைக்காரர் !!

By Selvanayagam PFirst Published Dec 3, 2019, 10:36 PM IST
Highlights

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சோக சம்பவத்தில்  இறந்த தன் இரு பிள்ளைகளின் கண்களையும், தானம் செய்த டீ கடைக்காரரின்  செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - நடூர் கண்ணப்பன் லே-அவுட்டில், கனமழையால், சிவசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான, 15 அடி உயரம், 50 அடி நீளம் உடைய, கருங்கற்களில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், அருகிலிருந்த வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாயினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.


இந்நிலையில் இந்த சோக சம்பவத்திலும், இறந்த தன் இரு பிள்ளைகளின் கண்களையும் தானம் செய்த, தந்தையின் மனித நேயம் காண்போர் நெஞ்சை நெகிழ வைக்கிறது. டீக்கடை நடத்தி வரும் செல்வராஜ் என்பவர், கல்லூரியில் படிக்கும் தனது மகள் நிவேதாவையும், 10ம் வகுப்பு படிக்கும் மகன் ரங்கநாதனையும் இவ்விபத்தில் பறி கொடுத்தார். 

டீக்கடையில் தங்கியதால் செல்வராஜ் மட்டும் உயிர் பிழைத்தார். பல ஆண்டுகளுக்கு முன்பே தன் மனைவியை இழந்த செல்வராஜ், இவ்விபத்தில் பிள்ளைகளையும் பறிகொடுத்து அநாதையானார்.

அரசு மருத்துவமனையில், குழந்தைகளின் கண்களை கொண்டு இருவருக்கு பார்வை அளி்க்கலாம் என டாக்டர்கள் கூறியதையடுத்து  செல்வராஜ் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். 


இதனையடுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிள்ளைகளின் 4 கண்களையும் செல்வராஜ் தானம் வழங்கினார். தீராத சோகத்திலும் தன் குழந்தைகளின் கண்களை தானம் செய்த தந்தையின் செயல், அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

click me!