
மெரினாவில் கொலையான வடமாநில வியாபாரியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். தொழிற்போட்டி காரணமாக கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.
மெரீனா கடற்கரை முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பிப் 12 வரை இந்த தடை நீடிக்கும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து மெரீனாவில் சட்ட ஒழுங்கு போலீசார் தவிர அதிரடிப்படை போலீசார், ஆயுதப்படை போலீசாரும் குவிக்கபட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு பேருக்கு மேல் யாரும் கூடாமல் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
வழக்கமாக மெரீனா கடற்கரையில் இருப்பதை விட கூடுதலாக 144 சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து பாதுகாப்புகளையும் மீறி நேற்று முன் தினம் இரவு வடமாநில வாலிபர் ஒருவர் மர்ம ஆசாமிகளால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
காலையில் வாக்கிங் சென்றவர்கள் வாலிபர் ஒருவர் கத்தி குத்துக்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்னரே கொலை சம்பவம் பற்றி அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் உடலில் ஐந்துக்கும் மேற்பட்ட கத்தி குத்துக்கள் இருந்தது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க டிப் - டாப்பாக உடையணிந்து இருந்தார். போலீசார் அவரது சட்டை பையில் இருந்து அவரது பொருட்களை அப்புறப்படுத்தியபோது அவரது ஆதார் கார்டு கிடைத்தது.
அதில் அவரது பெயர் நூர் ஹுசைன் அன்சாரி என்பதும் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது. கொலை பற்றி மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலையான வாலிபர் நுங்கம்பாக்கத்தில் ஒரு டெய்லர் கடையில் வேலை பார்த்தது தெரியவந்தது. கொலையான வாலிபரின் சகோதரர் கூறிய தகவல் உண்மையை வெளிகொண்டுவந்தது.
இவருக்கும் அதே கடையில் வேலை செய்து சில நாட்களுக்கு முன்னர் நின்றுவிட்ட ஐஸ்ஹவுஸ் பி.எம்.தர்காவை சேர்ந்த முனவர் ஷரீஃப் (25) என்பவனுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முனவர் பாஷாவை தூக்கி வந்து ஸ்டேஷனில் வைத்து விசாரித்தபோது நூர் உசைனை தான் கொலை செய்ததை ஒத்து கொண்டான்.
விசாரணையில் அவன் கூறியதாவது.
கொலையான வாலிபர் நூர் உசைன் அன்சாரி வேலை செய்த அதே டெய்லர் கடையில் முனவர் பாஷாவும் வேலை செய்துள்ளான். இடையில் சரியாக வேலைக்கு வராமல் லீவு போட்டதால் வேலையை விட்டு நிறுத்திவிட்டனர்.
தனது வேலை போனதற்கு நூர் உசைன் பாஷா தான் காரணம் என்று கோபமடைந்த முனவர் பாஷா அவனுடன் சண்டியிட்டுள்ளான். தனது வேலை திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் நூர் உசைன் வேலையில் இருக்க கூடாது என்று நினைத்த முன்வர் பாஷா, நூர் உசைனை ஒழிக்க நேரம் பார்த்து காத்திருந்துள்ளான்.
நேற்று , நூர் உசைன் ஐஸ்ஹவுஸ் வந்ததை பார்த்த முனவர் பாஷா அவனுடன் பேச்சு கொடுத்து கொண்டே நூர் உசைனை கடற்கரைக்கு விவேகானந்தர் இல்லம் எதிரில் உள்ளே அழைத்து சென்றுள்ளான். அங்கு முனவர் பாஷா , நூர் உசைனுடன் சண்டை போட்டுள்ளான்.
கத்தியை எடுத்து வயிற்றில் குத்தியுள்ளான். இதில் மல்லுக்கட்டும் போது நூர் உசைன் தன்னை தற்காத்துகொள்ள அதே கத்தியை பிடுங்கி முனவர் பாஷா தொடையில் குத்தியுள்ளான். இதை பார்த்து ஆத்திரமடைந்த முனவர் பாஷா கத்தியை பிடுங்கி நூர் உசைன் கழுத்தில் நான்கு இடங்களில் குத்தியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே நூர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலையாளி முன்வர் பாஷாவை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியையும் கைப்பற்றினர்.