கூடுதல் கட்டணம் வசூலித்து மருத்துவ கல்லூரி கொள்ளை; பெற்றோர்களுடன் மாணவர்கள் 7-வது நாளாக தொடர் போராட்டம்…

First Published Sep 6, 2017, 8:24 AM IST
Highlights
Medical college burglary collecting additional fees Students Fight for 7th Day ...


கடலூர்

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்து கொள்ளையில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.

இங்கு மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, “மருத்துவம், பல் மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களிடம் இருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்” உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30–ஆம் தேதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி நுழைவு வாயில் அருகே சாமியானா பந்தல் அமைத்து அங்கு விடுமுறை நாள் என்று கூட பாராமல் தொடர் போராட்டத்தை கையில் எடுத்து நடத்தி வருகின்றனர் மாணவர்கள்.

இவர்களது போராட்டத்தை இதுவரையில் அரசோ, கல்லூரியோ கண்டு கொள்ளவில்லை. அரசு வழக்கம்போல டிடிவி-யுடன் இணைவதைப் பற்றி பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

இவர்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கூட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக 7–வது நாளான நேற்று, சிதம்பரம் காந்தி சிலை அருகே சாமியானா பந்தல் அமைத்து மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது, “கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும்,

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்,

உடனடியாக தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்” என்கிற கோரிக்கையை வலியுறுத்து முழக்கங்களை எழுப்பினர்.

இதில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவிந்திரநாத் மற்றும் புவனகிரி ஒன்றிய விவசாயிகள் சங்கச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சேகர் மற்றும் பலர் பங்கேற்று மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பாதுகாப்புக்காக காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.

click me!