ஸ்டாலின், கனிமொழி, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றனர் – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு…

First Published Sep 6, 2017, 8:16 AM IST
Highlights
Stalin Kanimozhi G.Ramakrishnan and Mutharasan stimulate students to commit suicide - Krishnasamy


கோயம்புத்தூர்

மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றனர் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுகு பேட்டியளித்தார்.

அதில், “மாணவி அனிதா மரணம் தமிழகத்திற்கே இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வேளாண் படிப்பை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

மாணவி அனிதா வழக்குத் தொடர உதவியது யார்? அவரை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்திய பிரின்ஸ் கஜேந்திர பாபு, சிவசங்கரன் எம்.எல்.ஏ. ஆகியோரை விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

மேலும், அனிதா தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி ஆகியோரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளேன்.

தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஓட்டுக்காக அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். திமுக-வைச் சேர்ந்த கனிமொழி மற்றும் சிவாவை நான் தான் நாடாளுமன்ற உறுப்பினராக்கினேன். கனிமொழி எம்.பி. நன்றி மறந்து என்னை பா.ஜனதா கட்சியின் கைக்கூலி என்கிறார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் பல போராட்டங்களில் அப்பாவி மக்களின் மரணத்தை பயன்படுத்தி தி.மு.க. ஆட்சியை பிடித்ததே வரலாறு. அந்த கட்சி கொண்டுவந்த சமச்சீர் கல்வியால்தான் தமிழகத்தில் கல்வி தரம் சீரழிந்துள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றனர்.

தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு எந்த அடிப்படையில் தமிழக அரசு நிதி உதவி வழங்கியது என தெரியவில்லை.

மனிதநேய அடிப்படையில் அரசு வழங்கிய நிதியை பெற அவரது குடும்பம் மறுப்பதில் அரசியல் உள்ளது.

அப்பாவி மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது அதை எதிர்த்து போராடாமல், இப்போது போராட்டம் நடத்துவது ஏன்?

அடுத்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தற்போது போராடுகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

click me!