கொட்டி தீர்த்த கனமழை; அரசு மருத்துவமனை, பள்ளிக்கூடத்திற்குள் தண்ணீர் சூழ்ந்ததால் நோயாளிகள், மாணவர்கள் கடும் அவதி…

First Published Sep 6, 2017, 8:08 AM IST
Highlights
Heavy rain Patient students and students are suffering from water in the government hospital.


கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்குள் மழைநீர் வெள்ளமாய் சூழ்ந்தது. இதனால் நோயாளிகள், மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போன்று தேங்கியது.

மேலும் அந்தப்பகுதியில் இருக்கும் வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மழை தண்ணீர் சூழ்ந்தது. அத்துடன் அங்குள்ள குழந்தைகள் சிகிச்சை பெறும் வார்டு, மகப்பேறு வார்டு, தீக்காயத்திற்கு சிகிச்சை பெறும் வார்டு, செவிலியர்கள் தங்கி இருக்கும் பகுதி ஆகியவற்றுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

மேலும் மகப்பேறு வார்டில் வெளி ஆட்கள் காத்திருக்கும் பகுதி உள்ளது. அந்தப் பகுதியிலும் மழை வெள்ளம் தேங்கி நின்றது. மருத்துவமனைக்கு வருபவர்கள் தேங்கி நின்ற தண்ணீரில் நடந்துச் சென்று, அங்கு போடப்பட்டு உள்ள இருக்கையில் அமர்ந்து காத்திருந்தனர். அத்துடன் சிலர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தொட்டில் கட்டி தங்கள் குழந்தைகளை படுக்க வைத்தனர்.

இதுதவிர பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை பிரிவு முன்பு மழைநீர் குளம் போன்று தேங்கி நின்றது. இதனால் அங்கு செல்லும் நோயாளிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

பின்னர் நேற்று காலையில் மின் மோட்டார் மூலம் அந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மழை பெய்யும்போது மருத்துவமனைக்குள் தொடர்ந்து தண்ணீர் புகுந்த வருவதால், அதை தடுக்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று, அங்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் நோயாளிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. உக்கடம் கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் மாணவர்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. எனினும் மாணவர்கள் அந்த தண்ணீரில் நடந்து தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

கோவை புலியகுளம் மீனா எஸ்டேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்திலும் மழைநீர் தேங்கி நின்றது. 5–ஆம் வகுப்பு வரை உள்ள கட்டிடம் இருக்கும் பகுதிக்கு மாணவர்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்திருந்தது. இதனால் 1 முதல் 5–ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சுங்கத்தில் இருந்து புலியகுளம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திலும் மழைநீர் குளம்போன்று தேங்கியது. அதுபோன்று சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மேல்நிலைப்பள்ளி உள்பட ஏராளமான பள்ளிகளின் வளாகத்தில் மழைநீர் தேங்கியது. சில பள்ளிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர்.

click me!