புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார்
மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், அகோரம் என்பவர் பாஜக நிர்வாகியாவார்.
தருமபுரம் ஆதினம் வழக்கில் திருப்பம்: திருக்கடையூர் விஜயகுமாருக்கு தொடர்பில்லை - விருத்தகரி!
இந்த நிலையில், புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர்.
இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மிட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வருக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆசிர்வாதம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.