திருநங்கைக்கு திருமணமா? நாங்க நடத்த மாட்டோம்...! மறுத்த கோயில் நிர்வாகம்

By manimegalai a  |  First Published Oct 31, 2018, 2:08 PM IST

இளைஞருக்கும் திருநங்கைக்கும் நடக்கவிருந்த திருமணம், கோயில் நிர்வாகத்தால் தடைப்பட்டதை அடுத்து மணமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


திருநங்கைகள் சுயதொழில் துவங்க கடனுதவி, அடையாள அட்டை, இலவச பட்டா வழங்குதல், வீடு வழங்கும் திட்டம், சுய உதவி குழுக்கள் உருவாக்குதல், ரேஷன் கார்டு வழங்குதல் உள்ளிட்டவை அரசு மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் திருநங்கைகள், பல்வேறு தளங்களிலும் தங்களை நிரூபித்து வருகின்றனர். சிலர் குடும்பம் சகிதமாகவும் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருநங்கைக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த திருமணத்தை நடத்த கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, திருமணம் பாதியில் நின்றது.

Tap to resize

Latest Videos

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், இவரது மனைவி சுப்புலெட்சுமி. இவர்களது மகன் அருண்குமார். இவர் டிப்ளமா முடித்துள்ளார். இதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சிராமன் - வள்ளி தம்பதியர். இவர்களது மகள் ஸ்ரீஜா. இவர் பி.ஏ. படித்துள்ளார். திருநங்கையான ஸ்ரீஜாவுக்கும், அருண்குமாருக்கும் இருவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.

இவர்களது திருமணம், தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இதற்காக திருமண பத்திரிகையும் அடித்து, உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் வழங்கப்பட்டது.

திருமண நாளான இன்று (31.10.2018)  மணமக்கள் அருண்குமார், ஸ்ரீஜா,  உறவினர் மற்றும் நண்பர்கள் சகிதமாக இன்று காலை கோயிலுக்கு வந்துள்ளனர். திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று கோயில் நிர்வாகத்தினர் கூறினர். இதனால் மணமக்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இளைஞருக்கும் திருநங்கைக்கும் நடக்கவிருந்த திருமணம், கோயில் நிர்வாகத்தால் தடைப்பட்டதை அடுத்து மணமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்

click me!