
நீலகிரி
ஆதிவாசி கிராமத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மாவோயிஸ்டுகள் அங்குள்ளவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அரிசி, பருப்பு மற்றும் டீத்தூளை வாங்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள கேரளப் பகுதியான வைத்திரி கொளுதன்னா என்ற ஆதிவாசி கிராமத்திற்குள் ஒரு பெண் உள்பட ஐந்து மாவோயிஸ்டுகள் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் துப்பாக்கியுடன் திடீரென நுழைந்துள்ளனர்.
அங்குள்ள மொய்தீன் என்பவரது வீட்டுக்குச் சென்ற அவர்கள், அவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அரிசி, பருப்பு மற்றும் டீத்தூள் ஆகியவற்றை வாங்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதுகுறித்து கேரளாவில் உள்ள மேப்பாடி காவலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் வீடு புகுந்து அரிசி, பருப்புகளை வாங்கிச் சென்ற மாவோயிஸ்டுகள் ஏற்கனவே தேடப்பட்டு வரும் மாவோயிஸ்டுகளா? அவர்கள் எந்த வழியாகச் சென்றார்கள்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதிவாசி கிராமத்துக்குள் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் புகுந்த சம்பவம் குறித்து தமிழக, கர்நாடக காவலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்டு தடுப்புக் காவலாளர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.