அனைத்து விடுதிகளிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமாராக்கள்…

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 02:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
அனைத்து விடுதிகளிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமாராக்கள்…

சுருக்கம்

தேனி,

தேனி மாவட்டம் முழுவதும் அனைத்து விடுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும், அரசின் விதிமுறைகளை விடுதிகள் பின்பற்றுகின்றனவா என்றும் கண்காணிக்கப்படும் என்று ஆட்சியர் வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறை, சமூகநலத்துறை, தொழிலாளர் நலத்துறை, சுகாதாரத்துறை அலுவலர்களுடன், அனைத்து விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.

“பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட தொழிலாளர் நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாத விடுதிகளை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்படுகிறதா? என்பதனை கண்காணிக்கவும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனம், தனியார், மத நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற பிற நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் குழந்தைகள் தங்கும் விடுதிகளுக்கு இதுவரை உரிமம் பெறாதவர்கள், உடனடியாக உரிமம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று ஆட்சியர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட சமூக நல அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

PREV
click me!

Recommended Stories

ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!