மூதாதையர்களின் நினைவைப் போற்றும் “கல்லறைத் திருநாள்”

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 02:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
மூதாதையர்களின் நினைவைப் போற்றும் “கல்லறைத் திருநாள்”

சுருக்கம்

தஞ்சாவூரில், மூதாதையர்களின் நினைவைப் போற்றும் கல்லறை திருநாளை ஏராளமான கிறித்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறித்துவர்களால் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 2–ஆம் தேதி கல்லறை திருநாளாகவும், ஆத்மாக்களின் திருநாளாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தஞ்சையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் நடைபெற்றது. இத்திருநாளையொட்டி கல்லறைகளுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு இருந்தது.

தஞ்சை தூயபேதுரு ஆலய கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற கல்லறைத் திருநாளில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிறித்துவர்கள் இறந்த தங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறை முன்பு மலர்களை தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு மற்றும் உணவு வகைகளை வைத்து வழிபட்டனர். அப்போது சிலர் பிரிந்தோரை நினைத்து கண்ணீர் விட்டு அழுதனர்.

இதே போல் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பூக்காரத்தெருவில் உள்ள புனித சூசையப்பர் கல்லறைத் தோட்டத்திலும் ஏராளமான கிறித்துவர்கள் இறந்த தங்களது உறவினர்களின் கல்லறைகளின் முன்பு மலர்தூவியும், மெழுகுவர்த்தி கொளுத்தியும் வழிபட்டனர்.

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் 2 இடங்களில் கல்லறைத் தோட்டம் உள்ளது. இந்த 2 கல்லறைத் தோட்டத்திலும் கிறித்துவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறை முன்பு மலர்களை தூவி வழிபட்டனர். பின்னர் திருக்கானூர்பட்டியில் உள்ள 2 கல்லறை தோட்டத்திலும் பங்குத் தந்தைகள் பபியான், பால்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது.

கல்லறை திருநாள் குறித்து சமாதியில் வழிபட வந்தவர்கள் கூறுகையில், ‘‘எங்கள் மூதாதையர்களின் நினைவை போற்றும் விதமாகவும், அவர்கள் எங்களுக்கு கற்று தந்த வாழ்வியல்களை கடைபிடிக்கும் விதமாகவும் ஆங்காங்கே உள்ள கல்லறை தோட்டங்களுக்கு வந்து எங்கள் மூதாதையர்களுக்கு பிடித்தவற்றை அவர்கள் சமாதியில் வைத்து வேண்டிக் கொள்கிறோம். ஒவ்வொருவரும் இந்த குறுகிய வாழ்வில் செய்ய வேண்டிய நன்மைகளை எடுத்து சொல்வதற்காகவும், அனைவருக்கும் இறைவன் நியாய தீர்ப்பு வழங்குவான் என்ற உண்மையை புரிய வைப்பதற்காகவும் இந்த நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்..

PREV
click me!

Recommended Stories

8TH PAY COMMISSION: மத்திய அரசு ஊழியர்களே ரெடியா? சம்பளம் 3 மடங்கு, பென்ஷன் ரூ.34,470? அதிரடி அப்டேட்.!
Govt New Scheme: பெண்களுக்கு ரூ.5 கோடி வரை கடன்! வெற்றி மகளிர் திட்டம் 2026 – தகுதி, சொந்த முதலீடு, விண்ணப்பிப்பது எப்படி?