
இப்போது தமிழகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது டெங்கு காய்ச்சல். இந்த சீசனில், டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியாகியிருக்கின்றனர். ஆனால், அரசுத் தரப்போ, பலி எண்ணிக்கையை குறைத்துக் காட்டி வருகிறது. டெங்கு பாதிப்புகளை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் இப்போது பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடு தோறும் சென்று, தண்ணீர் தேங்காமல் பார்த்து, மருந்து அடித்து சுகாதாரப் பணிகளை பணியாளர்கள் பலர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெங்குவை அடுத்து இப்போது பன்றிக் காய்ச்சல் பயமுறுத்தி வருகிறது. முன்னர் சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவை மக்களை பெரும் துயருக்கு உள்ளாக்கியுள்ளன. இப்போது வடகிழக்குப் பருவமழைக் காலம் வேறு துவங்கியுள்ளது. இந்நிலையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தலைகாட்டத் தொடங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் டெங்குவை தொடர்ந்து பன்றிக் காய்ச்சலுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் பொன்மணி (25) கேரளா மாநிலம் புனலூரில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. இதனால் நேற்று சொந்த ஊருக்குத் திரும்பினார் பொன்மணி. இந் நிலையில் அவருக்கு பற்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர் நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தது அந்தப் பகுதியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் இதே போல் பன்றிக் காய்ச்சல் பரவிய போது, கடையநல்லூர் பகுதியில், இறைச்சிக் கழிவுகள் சாக்கடைகளில் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்படுவது தெரியவந்தது, இதை அடுத்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, இறைச்சிக் கழிவுகள் கொட்டப் படுவதை முறைப்படுத்தி, கழிவு நீர் வடிகால் முறையில் கவனம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.