மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகிற 15ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டில் மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 6 முறை வந்து பிரசாரத்தில் ஈடுப்பட்ட நிலையில், 7ஆவது முறையாக மீண்டும் வரவுள்ளார். அதேபோல், பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வரவுள்ளார்.
எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ள பாஜக தனது தலைமையில் தனியாக கூட்டணி அமைத்துள்ளது. பிரதமர் மோடி தொடங்கி பாஜக அமைச்சர்கள் என அனைவரும் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரண்டுள்ள இந்தியா கூட்டணியின் தேசியத் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு இதுவரை பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேசிய கட்சித் தலைவர்கள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் யாரும் பிரசாரத்துக்காக இதுவரை தமிழ்நாடு வரவில்லை. இத்தனைக்கும் தமிழ்நாடு தான் இந்தியா கூட்டணிக்கு பலமாக இருக்கும் மாநிலம்.
எனவே, இந்த விவகாரம் சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகிற 15ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலூர் மற்றும் புதுச்சேரி தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரிக்க உள்ளதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தியும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.