மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல்ஹாசன் தகவல்!

By Manikanda PrabuFirst Published Feb 21, 2024, 1:23 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தேர்தல் பத்திரம் மூலம் யாரிடமும் மக்கள் நீதி மய்யம் காசு வாங்கவில்லை. என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன். முழு நேர அரசியலுக்கு வருவது பற்றி என்னை கேள்வி கேட்கிறார்கள். முழு நேர அரசியல்வாதி என யாருமே இல்லை; முழு நோ அப்பனும் இல்லை, பிள்ளையும் இல்லை. நீங்கள் முழு நேர குடிமகனாகக் கூட இருப்பதில்லை. 40 சதவீதம் பேர் வாக்கு செலுத்தக் கூட வராமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள்.” என்றார்.

“30 ஆயிரம் பேர் ஓட்டு போடாததால் நான் கோவையில் தோற்றேன். ஓட்டு போடதாவர்கள் முழு நேர குடிமகன்கள் இல்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.

Latest Videos

 அரசியலை விட்டு என்னை போக வைக்க முடியாது. நான் கோவத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை; சோகத்தில் வந்தவன் என தெரிவித்த கமல்ஹாசன், விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு செய்ததில் பத்து சதவீதம் கூட மத்திய அரசு செய்யவில்லை. நாட்டு மக்களின் குடியுரிமையே ஆட்டம் கண்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு சமமான நிதிப்பகிர்வு தேவை. டெல்லியில் விவசாயிகள் போராடுவதைத் தடுக்க ஆணிப்படுக்கை போட்டு இருக்கிறார்கள். எதிர்ப்ப்டையை நடத்துவதுபோல் விவசாயிகளை மத்திய அரசு நடத்துகிறது. தெற்கு தேய்ந்தாலும் பரவாயில்லை என்று மத்தியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாடு அளிக்கும் நிதியில் 29 பைசா தான் நமக்கு திரும்பி வருகிறது.” என்றார்.

வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழல்கள் தொடரும் வரை போராட்டம் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது- கமல்ஹாசன்

மக்களவைத் தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. எனவே, மக்கள் நீதி மய்யம் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதுகுறித்து இன்றைய நிகழ்ச்சியின்போது பேசிய கமலஹாசன், “தேசத்தின் நலனில் அக்கறை கொண்டு இயங்கும் கட்சிகளோடு மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. மநீம கட்சியை மதித்து டார்ச் லைட் சின்னம் ஒதுக்கிய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.” என்றார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவுடனான கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையென்றாலும், மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஒருவேளை திமுக கூட்டணியில், கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், காங்கிரஸ் மூலம் அவர் கூட்டணிக்குள் வர வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் நீதி மய்யம் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த கையோடு, அவரது கட்சியை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்தார் கமல்ஹாசன். அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.77 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம்  கட்சி களமிறங்கியது. ஆனால், தோல்வியை தழுவியது. கோவையில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

ஆனால், எதிர்வரவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு கண்டிப்பாக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதால், கூட்டணி அமைத்தே இந்த தேர்தலை அவர் சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

click me!