ஜி.எஸ்.டியில் திருத்தங்கள் செய்யவேண்டி தமிழகம் முழுவதும் வருகிற 8–ஆம் தேதி கடையடைப்பு போராட்டம்…

First Published Aug 1, 2017, 7:59 AM IST
Highlights
make changes in GST orelse coming 8th shops will close in tamilnadu


திண்டுக்கல்

ஜி.எஸ்.டி.யில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 8–ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத் தொழில் வர்த்தகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஜி.எஸ்.டி.யில் பல்வேறு குழப்பங்களும், முரண்பாடுகளும் உள்ளன.

பல பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது? என்பது பற்றி வியாபாரிகளுக்கும் தெரியவில்லை. அதிகாரிகளுக்கு கூட தெரியவில்லை.

அதுமட்டுமின்றி, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, ஆடம்பரத்துக்காக பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த பர்னிச்சர் பொருட்களுக்கு குறைந்த வரியும், அத்தியாவசியமான மசாலா பொருட்களுக்கு கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முரண்பட்ட வரி விதிப்பு காரணமாக வியாபாரிகளும், மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஓட்டல் தொழில் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பைக் கண்டித்தும், அதில் திருத்தங்கள் கொண்டு வர வலியுறுத்தியும் வருகிற 8–ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம்.

முன்னதாக வருகிற 3–ஆம் தேதி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநில வர்த்தகர்கள் சார்பில் கர்நாடகாவில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் தொடர் போராட்டங்கள் நடத்துவது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, பாலித்தீன் பொருட்களை உற்பத்தி செய்யும் இடங்களிலேயே தடை செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

click me!