
காஞ்சீபுரம்,
பேருந்துகள் ஓடாததாலும், கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டதாலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லாமல் மாமல்லபுரம் வெற்று மைதானமாக காட்சியளித்தது. ஆங்காங்கே, முதல்வருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பேருந்துகள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு இயற்கை எய்தினார். நேற்று முன்தினம் மாலை அவரது உடல் நிலை குறித்து வெளியான தகவலை அடுத்து காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை.
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றும் விடுதிகள், மளிகை கடைகள், டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டு இருந்தன. திரையரங்குகளில் காட்சிகள் இரத்து செய்யப்பட்டன.
பேருந்துகள் ஓடவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் ஓடின. சாலையில் பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது. முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருந்தது.
காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் காஞ்சீபுரம் பேருந்து நிலையம் மற்றும் காஞ்சீபுரத்தில் முக்கிய வீதிகளான காந்தி ரோடு, காமராஜர் வீதி, வள்ளல் பச்சையப்பன் தெரு, ராஜவீதிகள் வெறிச்சோடி கிடந்தது.
காஞ்சீபுரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. வந்திருந்த வெளியூர் பயணிகளும் ஓட்டல்கள் இல்லாமல் அவதி அடைந்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
காஞ்சீபுரத்தின் முக்கிய வீதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கல்பாக்கம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், கூவத்தூர், பவுஞ்சூர் உள்பட கிராமங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வராததால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் வெளிநாட்டு பயணிகள் ஒரு சிலர் உணவருந்த ஓட்டல்களை தேடி அங்குமிங்கும் அலைந்தனர்.
மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவபடத்துக்கு அ.தி.மு.க.வினர் உள்பட பலர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாலாஜாபாத், கீழ்ஒட்டிவாக்கம், ஏகனாம்பேட்டை, பழைய சீவரம், ஊத்துக்காடு, நாயக்கன்குப்பம், தென்னேரி, உள்ளாவூர் உள்பட 61 கிராமங்களிலும் ஜெயலலிதாவின் உருவ
படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி கிராம மக்களும், அ.தி.மு.க.வினரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அய்யம்பேட்டை கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜெயலலிதாவின் உருவபடத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கருப்பு பட்டை அணிந்து கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் முக்கிய வீதிகள் வழியாக அமைதி ஊர்வலமாக சென்றனர்.