
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள பக்தர்கள், தீயில் கருகி நூற்றுக்கணக்கான புறாக்குஞ்சுகள் இறத்தாலும், கிழக்கு கோபுர மேற்கூரை இடிந்து விழுந்ததாலும் சகுனத் தடை ஏற்பட்டுள்ளதோ என அச்சம் அடைந்துள்ளனர். சிவாச்சாரியர்கள் உடனடியாக இதற்கு பரிகார பூஜை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் இரு பக்கங்களிலும் வளையல்கள், அலங்கார பொம்மைகள், விபூதி-குங்குமம் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
நேற்று இரவு 10.30 மணி அளவில் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து கரும்புகை வெளி வருவதை பார்த்த பக்தர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தல்லாகுளம், பெரியார் பஸ் நிலையம், அனுப்பானடி ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு படையினரும், விளக்குத்தூண், தெற்குவாசல் போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் வந்தபோது ஆயிரங்கால் மண்டபத்தை ஒட்டியிருந்த கடைகளில் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. 4 மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர்.
மேம்போக்காக இது ஒரு தீ விபத்து என்று எடுத்துக் கொண்டாலும் பக்தர்கள் மிகுந்ம அச்சத்தில் உள்ளனர். இந்த தீ விபத்தில் பழங்கால சிற்பங்கள் கருகி சேதமடைந்தன. கல்தூண்கள் சரிந்து விழுந்தன. மேற்கூரை பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்தன, அங்கிருந்த ஓவியங்கள் சேதமடைந்ததது மட்டுமல்லாமல் ராஜகோபுர பகுதியில் இருந்த நந்தி சிலையும் சேதம் அடைந்தது.
இதையெல்லாம் விட பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்தது அங்கிருந்த புறாக்கள் கருகி மடிந்ததுதான். மீனாட்சி தஞ்சம் என்று அங்கு வாழ்ந்து வந்த அந்த புறாக்கள் கரிக்கட்டையாய் கருகி உயிரை விட்டதைப் பார்த்த பக்தர்கள் கதறி அழுதனர்.
அதுவும் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது பொது மக்களையும், பக்தர்களையும் அச்சப்படவைத்துள்ளது. இந்த தீ விபத்து மட்டுமல்லாமல் மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்தடுத்து ஏற்படும் விபத்துக்களும் அதிர்ச்சி ரகம்தான்.
நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைத்துக் கொண்டிருந்தபோது கிழக்கு கோபுர வாசலின் மேற்கூரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
கடந்த 2015ல் இதே பகுதியில் தான் மின்னல் தாக்கி மேற்கூரை சேதம் அடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி மதுரையில் பெய்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கிழக்கு கோபுரம் வழியாக புகுந்த மழை நீர் சுவாமி சன்னதியை சூழ்ந்தது.
இப்படி அடுத்துடுத்து கிழக்கு கோபுரம் பாதிக்கப்படுவதால் இது 'சகுனத் தடை' என சிவாச்சாரியார்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இரவு விபத்து நடந்தபோதும் இன்று வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஆனாலும் பக்தர்களிடையே ஒரு வித பதற்றம் காணப்பட்டது என்னவோ உண்மை…