காடுவெட்டி குரு மரணத்தின்போது அரசு பேருந்துகள் சேதம் - இழப்பீடு கேட்டு ராமதாஸுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்...

By Suresh Arulmozhivarman  |  First Published Aug 21, 2018, 10:18 AM IST

காடுவெட்டி குரு மரணத்தின்போது பா.ம.க-வினர் அரசு பேருந்துகளை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டனர். 


காடுவெட்டி குரு மரணத்தின்போது பா.ம.க-வினர் அரசு பேருந்துகளை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டனர். சேதமடைந்த பேருந்துகளுக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு மதுரை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tap to resize

Latest Videos

திருநெல்வேலியைச் சேர்ந்த பொதுப்பணித் துறை ஊழியரான சுந்தரவேல் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த காடுவெட்டி குரு மே மாதம் இறந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள், பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள் பேருந்துகள் மீது கல்வீசியும், கடைகளை மூடியும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர். 

பா.ம.க-வினரின் இந்த செயலால் 73 அரசு பேருந்துகள் சேதமடைந்து இயங்குவதற்கு தகுதி அற்றவையாக இருக்கின்றன. இதனால் ஏற்பட்ட இழப்பை மீட்க தமிழக அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காடுவெட்டி குரு இறந்தபோது சேதப்படுத்தப்பட்ட அரசு பேருந்துகளுக்கான இழப்பீட்டை பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

இதற்கான உத்தரவை தமிழகத் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு அளிக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் சுந்தரவேல், "நான் ஏற்கனவே இரண்டு வழக்குகள் தாக்கல் செய்துள்ளேன். அரசியலமைப்பு படி யார் வேண்டுமென்றாலும் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்யலாம்" என்றுத் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "இவ்வழக்கு குறித்து விளக்கமளிக்க பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள்" என்று அதிரடியாக உத்தரவிட்டனர். பின்னர், இவ்வழக்கு விசாராணை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

click me!