மதுரையில், கர்ப்பம் தரிக்காத பெண்ணுக்கு 10 மாதங்களாக அரசு மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர்.
மதுரையில், கர்ப்பம் தரிக்காத பெண்ணுக்கு 10 மாதங்களாக அரசு மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர். குறித்த தேதியில் பிரசவ வலி ஏற்படாததால் வயிற்றில் கரு இல்லை கட்டி உள்ளது என்று பொய் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவர் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம், விரகனூர், கோழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (32). இவரது மனைவி யாஸ்மின் (26). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இந்த நிலையில் போன வருடம், அக்டோபர் மாதம், யாஸ்மின் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று சந்தேகப்பட்டு மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தார். அங்கு யாஸ்மின் கர்ப்பம் தரித்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அதன்பின்னர், யாஸ்மின் மற்றும் கணவர் நவநீதகிருஷ்ணனும் விராதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று கர்ப்பத்தை உறுதிச் செய்துகொண்டு தாய் - சேய் பாதுகாப்பு அட்டையை பெற்றுக் கொண்டனர். அதன்படி, யாஸ்மினுக்கு கர்ப்பிணி உதவித்தொகையாக ரூ.4000 அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
தொடர் சிகிச்சைக்காக மதுரை பெரிய மருத்துவமனைக்குச் செல்லுமாறு யாஸ்மினை அறிவுறுத்தியுள்ளனர் ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்கள். யாஸ்மினும் அதனையேற்று மதுரை பெரிய மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்தார்.
யாஸ்மினுக்கு ஜூலை 29-ல் குழந்தைப் பிறக்கும் என்று மருத்துவர்கள் தேதி குறித்து கொடுத்துள்ளனர். அந்த பதிவு அட்டை யாஸ்மினிடம் உள்ளது. குறிப்பிட்ட தேதியில் யாஸ்மினுக்கு எந்த வலியும் ஏற்படாததால் மனைவியை அழைத்துக் கொண்டு மதுரை பெரிய மருத்துவமனை வந்தார் நவநீதகிருஷ்ணன்.
யாஸ்மினை பரிசோதித்த மருத்துவர்கள் ஒரு வாரம் கழித்து மீண்டும் அழைத்து வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். ஆனால், ஒரு வாரத்திற்குப் பிறகும் யாஸ்மினுக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. சந்தேகமடைந்த மருத்துவர்கள், யாஸ்மினை பரிசோதித்தனர்.
சோதனையின்பிறகு யாஸ்மின் வயிற்றில் குழந்தையே இல்லை என்று நவநீதகிருஷ்ணனிண்டம் தெரிவித்தனர் மருத்துவர்கள். மேலும், வயிற்றில் குழந்தை இல்லை மாறாக கட்டி மட்டும்தான் உள்ளது என்று கூறி நவநீதகிருஷ்ணனுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இதனால் கோபமடைந்த நவநீதகிருஷ்ணன், பத்து மாதங்களாக கர்ப்பம் தரித்துள்ளார் என்று சிகிச்சை பெற்று வருகிறோம். இப்போது வந்து கட்டி என்கிறீர்களே! என்னய்யா மருத்துவம் பார்க்கிறீர்கள்? என்று மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து தனது மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
நேற்று காலை ஆட்சியர் அலுவலகம் வந்த நவநீதகிருஷ்ணன், ஆட்சியர் வீரராகவராவை சந்தித்தார். அவரிடம், "ஸ்கேன் செய்யும்போதெல்லாம் குழந்தை நன்றாக இருக்கிறது. அசைவு தெரிகிறது. என்று கூறிய மருத்துவர்கள் தற்போது கரு அல்ல கட்டி என்று கூறினர். அதனால், மீண்டும் ஒரு தனியார் ஸ்கேன் மையத்தில் பரிசோதித்தோம். அவர்கள் வயிற்றில் கட்டி எதுவுமில்லை என்று கூறி அறிக்கை தந்துள்ளனர்.
கர்ப்பிணி என்று பத்து மாதங்களாக சிகிச்சை அளித்துவிட்டு தற்போது கட்டி என்று பொய் தகவல் கூறும் அரசு மருத்துவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.