2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்... விஏஓ கொலை வழக்கில் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!

By Narendran S  |  First Published May 10, 2023, 9:09 PM IST

தூத்துக்குடி விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாதங்களில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 


தூத்துக்குடி விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாதங்களில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த பொன்.காந்திமதிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் கொடூரமாக கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றப்படுகையில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி முதல்வர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய ஏடிஜிபியிடம் மனு

Tap to resize

Latest Videos

இருப்பினும் காவல்துறையினர் லூர்து பிரான்சிஸிற்கு போதிய பாதுகாப்பு வழங்க தவறிவிட்டனர். இந்த வழக்கு முறப்பநாடு காவல் ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.  முறப்பநாடு காவல் ஆய்வாளர் மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து லஞ்சத்தை பெற்றுக் கொண்டு, மணல் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.  இந்த சூழலில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரித்தால் இந்த வழக்கின் உண்மை வெளி வராது. ஆகவே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், இந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இது மொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இதையும் படிங்க: ராஜபாளையம் அருகே தவறி விழுந்து நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்

அரசின் அறிக்கையின் படி, தென் மண்டல காவல்துறை தலைவர்  அஸ்ரா கார்க் கண்காணிப்பின் கீழ், துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள்  மீது குண்டாஸ் பதியப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் (குற்றபத்திரிக்கை) அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை, 4 வாரத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர்  வழக்கை விசாரனைக்கு எடுத்து மாவட்ட நீதிபதிக்கு வழக்கை 3 வாரத்தில் மாற்ற வேண்டும். தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி 2 மாதங்களில் தினந்தோறும் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

click me!