ராஜபாளையம் அருகே கொடிக்காய் பறிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவரது மகன் சிவபிரசாத். 12 வயதான இவர் அருகே உள்ள சிவகாமிபுரம் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு முடித்து 7ம் வகுப்பு செல்ல உள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால், தனது உறவினர் தென்காசி மாவட்டம், பருவக்குடி அடுத்துள்ள பால்வண்ணபுரம் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் என்பவரது 8 வயது மகன் சரண் உள்ளிட்ட நண்பர்கள் சிலருடன் இணைந்து விளையாடி உள்ளார்.
விளையாட்டின் போது அச்சங்குளம் கண்மாய்க்கு செல்லும் ஓடை கரையில் இருந்த மரத்தில் ஏறி சிறுவர்கள் கொடிக்காய் பறித்துள்ளனர். அப்போது எதிர்பராத விதமாக சிவராஜ் மற்றும் சரண் ஆகியோர் தவறி ஓடைக்குள் இருந்த கிடங்கில் விழுந்துள்ளனர்.
உடன் சென்ற நண்பர்களுக்கும் நீச்சல் தெரியாததால் ஊருக்குள் சென்று உறவினர்களை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் இருவரும் மூழ்கி விட்டனர். உறவினர்கள் வந்து தண்ணீரில் இறங்கி இரண்டு சிறுவர்களையும் தூக்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இத் தகவல் அறிந்ததும் சிவராஜ் வீட்டை சுற்றிலும் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் ராமலிங்காபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.