மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த ஜூன் 20ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 750 படுக்கைகள் வசதியுடன் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில், 50 சிறப்பு மருத்துவப் பிரிவுகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், 100 சிறப்பு மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிவார்கள். 100 மருத்துவப் படிப்பு இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரியும், 60 செவிலியர் இடங்கள்கொண்ட செவிலியர் கல்லூரியும் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைக் கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டது. எய்ம்ஸ் வளாகத்திற்கான கட்டுமானப் பொறியாளர் குழுவும், எய்ம்ஸ் மருத்து வர்கள் குழுவும் டெல்லியில் இருந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை யின் நிறுவனர் ஹக்கீம் காசிம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கேள்விகள் கேட்டிருந்தார். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு வழங்கப்பட்ட ஒப்புதல், தொடக்கவிழா தேதி, கட்டிடக் கட்டுமானத்தை டெண்டர் எடுத்துள்ள நிறுவனத்தின் விவரம் உள்பட 8 கேள்வி களை கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவையும், செலவினங்களுக் கான நிதி ஆணையமும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், நிதிஒதுக்கீடு மற்றும் கட்டுமான டெண்டர் குறித்த தகவல்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் பதிலளித்துள்ளது.
இது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால், தென் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மிகப்பெரும் உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எய்ம்ஸ் தமிழகத்திற்கு வருமா வராதா என்ற நீண்ட விவாதம் நடந்து, தமிழகத்தில் எந்த ஊரில் அமையும் என்பது பற்றியும் நீண்ட விவாதம் நடந்து, கடைசியாக, மதுரையில் அமையும் என்று தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கிடைத்த விபரம் வெளியானபோதும், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய, மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும் என தெரிவித்தார். தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம், மருத்துவக் கல்லூரி தொடர்பான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதால், சரியான நேர அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதில் எந்த தடையும் இல்லை. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.