டிசம்பர் 23, 2023 முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கும் என்பதால் 2024ஆம் ஆண்டில் தான் இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சனாதனம் தர்மம் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
சென்னையில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனாவைப் போல சனாதனமும் அழித்து ஒழிக்கப்பட வேண்டியது என்று பேசினார். இதற்கு பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதன் எதிரொலியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவருடன் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
டிசம்பர் 23, 2023 முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கும் என்பதால் 2024ஆம் ஆண்டில் தான் இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.