
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகங்களில் மது அருந்தும் இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தடுக்கவும், அதுகுறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காட்டைச் சேர்ந்த எம். காமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி, எழும்பூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது அருந்தும் இடத்திற்குக் குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர்.
இது சட்டப்படி தவறு மற்றும் சிறார் நீதிச் சட்டத்திற்கு (Juvenile Justice Act) எதிரானது. இத்தகைய சூழல் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதோடு, அவர்களது நல்வாழ்வையும் சீர்குலைக்கும்.
எனவே, மது அருந்தும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, வரவிருக்கும் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, நட்சத்திர விடுதிகள் அல்லது உணவகங்களில் மது அருந்தும் இடத்திற்குக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதாகப் புகார்கள் வந்தால், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் குழந்தைகள் மது அருந்தும் இடங்களில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது. புத்தாண்டு நெருங்கும் வேளையில், விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு இது ஒரு முக்கிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.