ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கு ரெடியா?.. 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'.. தேதி குறித்த அரசு!

Published : Dec 22, 2025, 07:39 PM IST
Chennai Sangamam 2026

சுருக்கம்

சென்னையில் விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத் திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தலைநகர் சென்னையில் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 2026ம் ஆண்டின் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவை வரும் 14.1.2026 அன்று மாலை 6 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் தமிழகத்தில் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளன.

'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா'

இதனை தொடர்ந்து 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம். ராஜரத்தினம் விளையாட்டரங்கம், தி.நகர் நடேசன் பூங்கா, ராஜா அண்ணாமலைபுரம்- அரசு இசைக் கல்லூரி வளாகம், கிண்டி கத்திபாரா சந்திப்பு,

 அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, அசோக் நகர் மாநகராட்சி விளையாட்டு திடல், வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், ஜாபர்கான் பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை, பல்லவாரம் கன்டோன்மெண்ட் பூங்கா, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி மைதானம் ஆகிய 20 இடங்களில் 15.1.2026 முதல் 18.1.2026 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளன.

ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டும்

'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில்' 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம். பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.

சுடச்சுட உணவுத் திருவிழா

மேலும் பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகள் வழங்க உள்ளனர். சென்னையில் விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத் திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு மகிழும்படி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பேச்சுவார்த்தையில் ஏமாற்றம்.. ஜன. 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!