
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஃபோட்டா ஜியோ (FOTA GEO) கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் பின்வரும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
ஜாக்டோ-ஜியோ மற்றும் ஃபோட்டா ஜியோ அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஃபோட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார், "அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்திய விதம் எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது. பொங்கலுக்கு முன்பாக நல்ல முடிவு எடுப்பதாக அமைச்சர்கள் கூறினாலும், அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எந்தவிதமான உறுதியான வாக்குறுதியையும் அரசு வழங்கவில்லை." என்றார்.
டிசம்பர் 29ஆம் தேதி தமிழகம் தழுவிய கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்றும், ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பும் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை தந்ததாகக் கூறியுள்ளது. இதனால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்துள்ளது. டிசம்பர் 27ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் வேலைநிறுத்தம் தொடர்பான ஆயத்த மாநாடு நடைபெறும் என்றும் அன்றைய தினம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்குச் செல்லவும் ஜாக்டோ ஜியோ கூறியுள்ளது.
இந்தக் கூட்டமைப்பில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஜனவரி மாதம் அரசுப் பணிகள் மற்றும் கல்விப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.