
Chennai sanitation workers strike : சென்னையை அழகாக பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தூய்மை தொழிலாளர்களின் பணியாகும். இந்த சூழ்நிலையில் சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் (ராயபுரம், திரு.வி.க. நகர்) தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை மாநகராட்சி எடுத்துள்ளது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் பாதிக்கப்படும் என்ற அச்சம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 13 நாட்களாக சென்னை மாநகராட்சிக்கு முன்பாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்களாக மாதம் ரூ.22,950 பெற்று வந்தவர்களுக்கு, தனியார் நிறுவனங்களின் கீழ் பணியாற்றினால் ரூ.16,950 அல்லது பிடித்தம் போக ரூ.12,500 மட்டுமே கிடைக்கும் என்று தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள். மேலும் தற்போது பெற்று வரும் ஊதியம் ரூ.22,950 குறைக்கப்படாமல், பணி பாதுகாப்புடன் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். அரசு சார்பாகவும் தூய்மை பணியாளர்களிடம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்த போதும் தங்கள் முடிவில் எந்தவித மாற்றம் இல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசின் சார்பில் துய்மை தொழிலாளர்களுக்கு 100% வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் எனவும், பணி பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்கள் முடிவில் உறுதியாக இருந்த தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுமக்கள் நடந்து செல்லும் வழிப்பாதையை அடைத்து போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் மருத்துவமனை உள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்ற நீதிபதிகள் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசோ தூய்மை பணியாளர்களை அகற்ற போலீசாரை பயன்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லையெனவும் தூய்மை பணியாளர்களே கலைந்து செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பதாக தமிழக அரசு சார்பாக நீதிம்ன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே நீதிமன்ற உத்தரவையடுத்து தூய்மை பணியாளர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்ய போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.