
TASMAC scam : தமிழகத்தில் அமைச்சர்களை குறிவைத்து பல இடங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனைகளை மேற்கொண்டது. அந்த வகையில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடி, கேஎன் நேரு, துரைமுருகன் என சோதனை நீடித்தது. இதன் அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தியது. கடந்த மார்ச் 6 முதல் 8 வரை முதல் கட்ட சோதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மே மாதத்தில் இரண்டாவது கட்டமாக மேலும் சோதனைகள் தொடர்ந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், தொழிலதிபர் தேவக்குமார், மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
மேலும் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆகாஷ் பாஸ்கரனின் தேனாம்பேட்டை வீடு மற்றும் விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. அப்போது விக்ரம் ரவீந்திரனின் இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆகாஷ் பாஸ்கரனுக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு இந்த முறைகேடுகளுடன் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டியது.
ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில், டாஸ்மாக் முறைகேடுகளுடன் தனக்கும் தொடர்பும் இல்லை எனவும், தான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் எனவும் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து விக்ரம் ரவீந்திரன் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிடுகையில், தான் டாஸ்மாக் ஊழியர் இல்லை எனவும், விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தவறு எனவும் அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்போது நீதிபதிகள், சீல் வைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும், சோதனை நடத்தலாம் ஆனால் சீல் வைப்பது சட்டவிரோதம் எனவும் கூறினர்.
இதனையடுத்து இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வு, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு நேற்று உத்தரவிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று அமலாக்கத்துறை தரப்பில் டாஸ்மாக் முறைகேட்டில் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்தனர். மேலும், தங்கள் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என விக்ரம் ரவீந்திரன் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசை திரும்பப் பெறுவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் எம்.எச்ஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு, இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில், டாஸ்மாக் முறைகேட்டில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு அமலாக்கத் துறையிடம் எந்த ஆதாரங்களும் இல்லையென தெரிவிக்கப்பட்டது. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், இருவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை எனக் கூறி, அமலாக்கத் துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது, இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, அமலாக்கத் துறை முன் வைத்த கோரிக்கையை நீதிபதிகள், ஏற்க மறுத்து விட்டனர் மேலும், சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பிரதான வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.