
அரசு போக்குவரத்து துறைக்கு சொந்தமான எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 260 பேருந்துகள் இயங்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கும் அரசு பேருந்து சேவை கிடைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பு இல்லாமல் சக்கரம் கழன்று ஒடும் சம்பவங்கள் மற்றும் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
அரசு விரைவு பேருந்து
இந்நிலையில் மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று காலை 9.30 மணிக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே வந்தக்கொண்டிருந்த போது அரசுப் பேருந்தின் இரு அச்சுகளும் முறிந்து 4 சக்கரங்கள் சாலையில் கழன்று ஓடியன.
பயணிகள் அதிர்ச்சியில் அலறல்
இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர். ஆனால், ஓட்டுநரின் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில், அரசு பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி வேறு பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக போக்குவரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இதே போன்று அரசு பேருந்து சக்கரங்கள் களன்று ஓடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் ஓட்டப்படுவதாலே இந்த விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது என பொதுமக்கள் தரப்பில் கூறுகின்றனர்.