செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மூன்று முறை தள்ளுபடி செய்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், சாதாரண ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.
மோடி அரசின் மற்றொரு ஊழல் வெளிவந்துள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியது. எனவே, ஜாமீன் கிடைக்க அமைச்சர் பதவி இடையூறாக இருக்கக் கூடாது என்பதால், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், “செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை விரைவாக விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; சகோதரர் அசோக் குமாரும் தலைமறைவாக உள்ள நிலையில் செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியில் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.” என கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான நேற்றைய விசாரணையின்போது, அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் தனது வாதத்தை நேற்று நிறைவு செய்தார். இதையடுத்து, அமலாக்கத்துறை வழக்கறிஞர் சுந்தரேசன் வாதத்திற்காக வழக்கின் விசாரணை இன்றைய தினத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று நடந்த விசாரணையின்போது, வழக்கறிஞர் சுந்தரேசன் தனது வாதத்தை நிறைவு செய்தார்.
தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பதிலளிக்க வழக்கின் விசாரணையை வருகிற 19ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.