பாலிவுட் நடிகை பூஜா பட் நில வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோத்தகிரி தாலுக்கா ஜகதா கிராமத்தில் திரைப்பட தயாரிப்பாளரும், பாலிவுட் நடிகையுமான பூஜா பட் வாங்கிய 26.12 சென்ட் நிலத்தை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார், பூஜா பட்டின் வழக்கறிஞர் கார்த்திக் சேஷாத்ரி ஆகியோரின் மறுபரிசீலனை தொடர்பாக முரண்பட்ட கூற்றுக்கள் காரணமாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978ஆம் ஆண்டில் பட்டியலினத்தவரான எம்.குப்பன் என்பவருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்திருந்தார். ஆனால், அதனை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். தொடர்ந்து, பலரிடம் கைமாறிய அந்த நிலைத்தை, பாலிவுட் நடிகை பூஜா பட் கடந்த 1990ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.
ஆனால், பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டது.
அந்த பகுதியில் இதேபோன்று நிலம் வாங்கிய பூஜா பட் உள்ளிட்ட பலர் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவை எதிர்த்து 2017ஆம் ஆண்டில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இதேபோன்று அரசுக்கு சொந்தமான சொத்துக்களை மீண்டும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, பாலிவுட் நடிகை பூஜா பட்டிடம் இருந்து நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் கோத்தகிரி தாலுகா தாசில்தாரால் தொடங்கப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர் வாதிட்டபோது, அதனை மறுத்த பூஜா பட்டின் வழக்கறிஞர் சொத்தை அவர் தொடர்ந்து அனுபவித்து வருவதாக வாதிட்டார்.
இந்த முரண்பட்ட வாதங்கள் காரணமாக, நிலத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பக்கத்து நில உரிமையாளர் பிங்கிள் ரமேஷ் ரெட்டி சார்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் தாக்கல் செய்த மற்றொரு ரிட் மேல்முறையீட்டு மனு மீதும் நீதிபதிகள் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்தனர்