சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு கண்டனம்: பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

By Manikanda PrabuFirst Published Feb 28, 2024, 5:22 PM IST
Highlights

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக தங்கவேலு இருந்த போது பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்ததாக அரசு புகார்கள் வந்தது.  இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்,  அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது.

ஆனால் பரிந்துரையை செயல்படுத்தாமல் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் காலம் தாழ்த்தி வந்தார்.  இதனிடையே உயர்கல்வித்துறை செயலாளரின் பரிந்துரையை எதிர்த்து குற்றச்சாட்டுக்கு உள்ளான பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Latest Videos

2029இல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் சட்ட ஆணையம்!

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையின் போது, ஓய்வு பெற உள்ள நிலையில், தன்னை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டதாக தங்கவேலு சார்பில் வாதிடப்பட்டது. அப்போது, உயர் கல்வித் துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு, தற்போதைய பதிவாளர் சார்பாக அளிக்கப்பட்ட பதிலில், பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தான் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பதால், உயர் கல்வித் துறை செயலாளரின் பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? என துணைவேந்தருக்கு கேள்வி எழுப்பினார். மேலும், முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எந்த தடையும் இல்லை எனவும், அவருக்கு எதிராக நடைபெற்ற விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

click me!