
வேந்தர் மூவிஸ் மதன் கூட்டாளி சுதிர் 3 நாட்கள் காவல் துறை விசாரணைக்கு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த மே மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாகவும், மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாகவும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மதன் மீது 111 புகார்கள் கூறப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டு 109 மாணவர்கள் மதனை சந்தித்து எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சேர பணம் தந்தனர். 109 மாணவர்களும் மதனிடம் தந்த தொகை 70 கோடி ரூபாய் என் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 109 பேரில் 14 மாணவர்கள் மட்டும் பணத்தை மீட்க உயர்நீதிமன்றத்தை நாடினர்.
வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவானதை அடுத்து, அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், அவரது தாயார் ஆர்.எஸ்.தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்படை அதிகாரிகள், தங்களது புலன் விசாரணை குறித்து அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், தனிப்படை போலீசார் நடத்தும் விசாரணைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ’மனு தாக்கல் செய்யப்பட்டு 70 நாட்கள் ஆகியும், விசாரணையில் முன்னேற்றம் இல்லை. வழக்கை தமிழக போலீசாரால் திறம்பட விசாரிக்க முடியவில்லை என்றால், வழக்கை வேறு ஒரு புலன் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கலாம்’ என்று கண்டித்தனர்.
இதையடுத்து போலீசார் பச்சைமுத்து வேந்ந்தரை கைது செய்தனர்.அவர் பின்னர் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில் மதனை அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் ஆஜர் படுத்தாவிட்டால் கமிஷனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்போம், எப்படி வழக்கை நடத்துவது என்று எங்களுக்கு தெரியும் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் கடந்த வாரம் மதனின் முக்கிய கூட்டாளி சுதிரை ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுதிரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இன்று அந்த மனு மீதான விசாரணை வந்தது. இதில் மதன் கூட்டாளி சுதிரை 3நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார். வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.30மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்திரவிட்டுள்ளார்.
சுதிரிடம் நடத்தப்படும் விசாரணையில் மதன் பற்றிய பல தகவல்கள் மற்றும் இருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது.