
திருச்சியைச் சேர்ந்த சைக்கோ கொலையாளி சப்பாணி அளித்த தகவலின்பேரில் மேலும் 2 பேரின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் நகை - பணத்துக்கு ஆசைப்பட்டு 8 பேரை கொன்று புதைத்த சைக்கோ கொலையாளி சப்பாணியை கடந்த 29 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர், சப்பாணியிடம போலீசார் நடத்திய விசாரணையில் சத்தியநாதன், குமரேசன், விஜய்விக்டர், கோகிலா, தேக்கன் ஆகியோரின் சடலங்களைத் தோண்டி எடுத்தனர்.
சப்பாணியை காவலில் எடுத்துள்ள தனிப்படை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சப்பாணி கொலை செய்தது 8 பேர் மட்டும்தானா? மேலும் யாராவது கொன்று புதைத்திருக்கிறாரா? இந்த கொலைகளில் சப்பாணியுடன் தாய் கருப்பாயி (80), மனைவி மோகனப்பிரியா (32) ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தல் அவர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை நேற்று இரவு வரை நடந்துள்ளது.
சப்பாணியிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 பேரின் சடலங்களை இன்று தோண்டி எடுத்தனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சப்பாணியிடம் இருந்து கூடுதல் தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், சொன்னதையே திரும்ப திரும்ப பேசுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சப்பாணியின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால், நாளை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.