காதல் கல்யாணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்த இளைஞரை, பெண் வீட்டார் அரிவாளால் வெட்டிவிட்டு, பெண்ணை அழைத்துக் கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.
காதல் கல்யாணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்த இளைஞரை, பெண் வீட்டார் அரிவாளால் வெட்டிவிட்டு, பெண்ணை அழைத்துக் கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஸ்டார்வின் (24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் டிக்சோனா (22), கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக ஸ்டார்வின்-டிக்சோனா ஆகியோர் வீட்டை விட்டு ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள், கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஆஜராக வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த டிக்சோனாவின் தந்தை ஜெயபால், மற்றும் அவரது உறவினர்கள், ஸ்டார்வின் வந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
பின்னர், அந்த வாகனத்தை சரமாரியாக தாக்கினர். காரினுள் இருந்த மகள் டிக்சோனாவை இழுத்துச் சென்ற அவர்கள், ஸ்டார்வினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதைத் தடுக்க சென்ற ஸ்டார்வினின் உறவினர்கள் சுரேஷ், அருள் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
அரிவாள் வெட்டுபட்ட இவர்கள் மூவரும், நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால், இந்த தாக்குதல் நடந்திருக்காது என்று ஸ்டார்வினின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.