
மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வு, பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி உயர்வு போன்ற லாரி உரிமையாளர்களை பாதிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நடவடிக்கைகளை கண்டித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தது.
இதனால் வடமாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்துக்கு வருவது தடைபட்டது அதேபோல் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பொருட் களும் தேங்கி கிடக்கின்றன.
இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் லாரிகளின் காப்பீட்டு கட்டணம் தொடர்பாக மத்திய அரசுடன், லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடரும் என்று தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய மோட்டார் காங்கிரசும் இன்று முதல் போராட்டத்தில் குதித்தது.
இந்நிலையில் ஐதராபாத்தில் இன்று இரண்டாவது கட்டமாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. லாரிகளுக்கான காப்பீட்டத் தொகையை 50 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக குறைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
மற்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து லாரிகள் வேலை நிறுத்தம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தையில் ஆந்திர மாநில போக்குவரத்து ஆணையர் பாலசுப்ரமணியன் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக, லாரி உரிமையாளர்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.